அளவுக்கு மிஞ்சினால்...
"போ நீ போ ...
தனியாக தவிக்கின்றேன். துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன். உயிர் வேண்டாம் தூரம் போ ..."
- இது "3" திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் ஆரம்ப வரிகள்.
ஒரு கிண்ணத்தில் ஒரு அளவு தண்ணீர் ஊற்றி பின்னர் அதில் காலளவு சர்க்கரையை போட்டால் அது கரைந்து விடும். மேலும் காலளவு சர்க்கரையை போட்டால் அதுவும் கரையும். இப்படியே போட்டுக்கொண்டே போனால் ஒரு அளவுக்கு மேல் சர்க்கரை கரையாது அல்லவா ?
அது தான் திகட்டும் நிலை (Saturation)
இப்போது அடிப்படையை பார்ப்போம். வாழ்க்கையில் எல்லாமே கணக்குதான் என்னும் தத்துவத்தில் இங்கு தண்ணீர் ஒரு பங்கு என்றால் சர்க்கரையின் கரையும் அளவு என்பது ஒரு அளவோ , இரண்டு அளவோ இருக்கலாம். மேலும் ஆழமாக பார்த்தால், இதில் தண்ணீர் - சர்க்கரை கரையும் அளவு வேதியல் ரீதியாக ஒரு அர்த்தம் (அணுக்கள் , மூலக்கூறுகள் மாறுபாடு பொறுத்து) இருக்கும்.
இது போலத்தான் காற்றில் ஒளிந்திருக்கும் ஈரப்பதம் என்பது. இந்த ஈரப்பதமானது கூட காற்றில் ஒரு அளவுக்கு மேல் சேராது. நீர் மூலங்கள் (water sources) தான் ஈரப்பததை அதிகரிக்கின்றன. காற்றின் வெப்ப நிலை, வளி மண்டல அழுத்தம் பொறுத்து ஈரப்பதம் மாறுபடும். இது 100% எட்டியதும் , இந்த திகட்டிய ஈரக்காற்றால் மிகவும் புழுக்கம் ஏற்படும்.
மனித மனங்களில் "திகட்டல்" வருவதன் காரணம் பல்வேறாக இருக்கலாம். ஆனால் அடிப்படை என்று பார்த்தால் "எதிர்பார்ப்புகள்" அதிகமானால் (பேராசை) எல்லாமே விரைவில் அலுத்துவிடும். அப்பொழுது திகட்டல் எட்டிப் பார்க்கும் . இந்த திகட்டலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன...?
1. இனம் புரியாத கோபம் எல்லோர் மீதும் ஏற்படலாம்.
2. காரணமே இல்லாமல் எதன் / எவர் மீதும் எளிதில் விருப்பமோ / வெறுப்போ ஏற்படலாம்.
3. புதிது புதிதான பழக்க வழக்கங்கள் ஏற்படலாம்.
4. நடை முறைக்கு ஒத்து வராத விஷயங்களில் ஆர்வம் ஏற்படலாம்.
5. எவரையும் ஒரு பொருட்டாக மதிக்காத போக்கு வரலாம்.
தற்போதைய உலகில் "மாற்றங்கள்" தான் பீடு நடை போடுகின்றன. மாற்றங்கள் தேவை தான்.தேவையானவற்றில் மட்டுமே. எல்லாவற்றிலும் அல்ல. இப்பொழுது "கோபம்" பற்றிய ஒரு கதை .....
****************
ஒரு சாது தன் சீடர்களிடம் 'கோபப்படும்போது ஏன் ஒருவர் மற்றவரைப் பார்த்து கத்துகிறார்?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தார்கள். ஒரு சீடன் 'நாம் நம்முடைய பொறுமையை இழந்து விடுகிறோம். அதனால் சத்தம் போட்டு கத்துகிறோம்' என்றான். அதற்கு சாது, 'ஏன், அவர்கள் பக்கத்தில் தானே இருக்கிறார்கள்? பின் ஏன் கத்த வேண்டும்' என்று மீண்டும் கேட்டார்.
.
சீடர்கள் ஒவ்வொரு பதிலை கொடுத்தார்கள். அதில் ஒன்றிலும் திருப்தி
அடையாத சாது சொன்னார், 'ஏன் கோபம் வரும்போது கத்துகிறார்கள்
தெரியுமா? கோபம் வரும்போது அவர்களின் இருவரின் இருதயமும்
ஒருவரையொருவர் விட்டு, தூர போய் விடுகிறது. அவர்களையுமறியாமல்,
தாங்கள் மற்ற நபரோடு தூர போய் விட்டோம் என்கிற எண்ணத்தினால்
சத்தமாய் கத்துகிறார்கள்' என்றார்.
..
..
அப்போது ஒரு சீடன், 'கோபம் வரும்போது கத்துகிறார்கள், ஆனால் அன்பு
வரும்போது?' என்று கேட்டான். 'அன்பு வரும்போது அவர்கள் மெதுவாக
பேசுகிறார்கள். காதில் கிசுகிசுப்பாய் பேசினாலும் அது நன்கு கேட்கும்,
ஏனெனில் அவர்கள் இருதயம் மிகவும் அருகில் இருப்பதால். கடைசியில்
அவர்கள் பேசக்கூட வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டாலே போதும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கிக்
கொள்ளும்' என்றுக் கூறினார். அது எத்தனை உண்மை!
.
.
திருமணமான புதிதில் மற்றவர்கள் கேட்காத வண்ணம் மெதுவாக பேசிக்
கொள்ளும் தம்பதியர், நாளாக நாளாக ஒருவர் ஏன் பேசுகிறார் என்று
நினைக்கும் வண்ணம் மிகவும் சத்தமாக கத்தி, பேசி சண்டைப் போட்டுக்
கொள்ளுகிறார்கள்.
.
.
அதே தம்பதியர், நாளாக நாளாக எதுவும் பேசாமலே கண்களினாலே
பார்த்து ஒருவரை யொருவர் புரிந்துக் கொள்ளும் காலக்கட்டத்திற்குள்ளும்
வருகின்றனர். புது தம்பதியினர் போல பழைய தம்பதிகள் அதிகம் பேசிக்
கொள்ளாவிட்டாலும், இருவரும் இருதயம் ஒத்திருப்பதால் அதிகமாய்
பேசாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்துக் கொள்கின்றார்கள்.
.
சில வேளைகளில் பழைய தம்பதியராயிருந்தாலும், கோபம் அளவு கடந்து
சில வேளைகளில் பழைய தம்பதியராயிருந்தாலும், கோபம் அளவு கடந்து
வரும்போது, எதையுமே நினைக்காமல் ஒருவரையொருவர் வார்த்தைகளால்
தாக்கி, புண்பட்டு, அன்று முழுவதும் சாப்பிடாமலும், அப்படியே
ஜெபிக்காமலும் தூக்கத்திற்கு செல்கின்றனர்;. பசியினாலும்,
கோபத்தினாலும் தூக்கமும் வராமல், எழுந்துப்போய் சாப்பிடவும் வறட்டு
கௌரவம் விட்டுக் கொடுக்காமல், பாடுபடுவார்கள். ஏன் இந்தப்பாடுகள்?
சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக மன்னித்து மறந்து, ஜெபித்துவிட்டு
படுத்தால், அடுத்தநாள் புதிய நாளாக, அன்றலர்ந்த மலராக
புத்துணர்ச்சியோடு எழுந்தரிக்கலாமில்லையா?
.
.
தம்பதியர் மட்டுமல்ல, மற்றவர்களும் மனதில் கோபத்தை வைத்துக்
கொண்டிருப்பது சரியல்ல, எந்த புதிய புண்களையும் சீக்கிரம்
ஆற்றிவிடலாம். ஆனால் அது சீழ்வைத்து, வீக்கம் கட்டிப் போனால் அதை
ஆற்றுவது கடினம். அதுப்போல கோபம் கொண்டாலும் மனதில் வஞ்சம்
வைத்து பழிவாங்கத் துடிக்காமல், அதை அன்றே மன்னித்து,
மறந்தோமானால், அதனால் நமக்கு பின் விளைவுகள் இராது. ஆனால்
மனதில் வைத்து எப்போதும் பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு
செயல்பட்டால், அதனால் நம் உடல் நலம் கெடுவதுடன், அதிலிருந்து
விடுபட்டு வருவது கடினமாகலாம்.
கசப்பு மனப்பான்மை, குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கம், பிறர் மனதை புண்படுத்துதல், வஞ்சக புத்தி ஆகியவை தூய அன்பென்னும் மரத்தில் உற்பத்தியாகுபவை அல்ல.
****************
ஆரம்பத்தில் காணப்படும் "3" திரைப்பட பாடல் வரிகளுக்கும் இந்த பதிவிற்கும் என்ன சம்மந்தம் ?
இதுவும் ஒரு திகட்டலின் வெளிப்பாடு தானே ! ஒருவருக்கு விரும்பியது எல்லாம் உடனுக்குடன் கிடைக்க ஆரம்பித்து விட்டால், இனம் புரியாத வெறுப்பும் , விரக்தியும் , கோபமும் உண்டாவது சிலருக்கு இயற்கை. ஆரோக்கியமற்ற இந்த நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மனநல மருத்துவம் செய்து கொண்டால் மிகப்பெரிய நன்மையை அடையலாம்.
இல்லாவிடின் இந்த திரைப்படத்தில் வரும் கதாநாயகனின் இறுதி நிலையை அடைய நேரிடும்.
(அழகான கதையம்சம், ஆழமான உட்கருத்தை இந்த சமூகத்திற்கு எடுத்துரைத்த இந்த திரைப்படத்தை உருவாக்க உழைத்த அனைவரையும் பாராட்டலாம்.)
***பகுதி***
நன்றி : http://anudhinamanna.net/
No comments:
Post a Comment