photo

photo
Venkatesh.A.S

Monday 14 October 2013

Man of Self Esteem (வைராக்கிய மனிதர்கள்)



மனித வைராக்கியம் 

 வைராக்கியத்தில் இரண்டு வகை உண்டு, ஒன்று பிரசவ வைராக்கியம், இன்னொன்று மயான வைராக்கியம். இதில் பிரசவ வைராக்கியம் என்பது பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் இன்பம் கலந்த துன்பத்தால் இனி மேல் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சபதமேற்று, பின் அதை மறப்பது. மயான வைராக்கியம் என்பது ஏதாவது இறந்தவர் வீட்டுக்கு போனால் நாமும் சாகப்போகிறோம் என்ற எண்ணம் மேலிட்டு இனி மேல் நேர்மையாக நடக்கவேண்டும் என்று எண்ணி, சபதமேற்று – இரண்டு நாளில் மறந்து மாமூல் வாழ்க்கைக்கு வருகிறோமே அதுதான். இவை இரண்டுமே தோன்றி மறையும் மனித அவலங்கள்.





வைராக்கியம் என்பது கண்டிப்பாக மனிதர்களுக்கு இருக்க வேண்டிய  ஒன்று.  வைராக்கியம் என்பது சுய சிந்தனை எனலாம். இதில் போலியானதையே பிரசவ வைராக்கியம் , மயான வைராக்கியம் என்று சொல்கிறோம். நிகழ்காலத்தில் எல்லாவற்றிலும் போலிகள் ஊடுருவதால் இங்கேயும் வைராக்கியம்  என்பதை "உண்மையான வைராக்கியம்" என்று வாசிக்கவும். 

இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடு (Principle) இருக்கும்.  சில பேருடையது சரியாகவும் சில பேருடையது தவறாகவும் இருக்கலாம். ஆனால் கோட்பாடுகள் அடிப்படையில் நேர்மையாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு நடுத்தர வர்கத்து மனிதனுக்கு "நான் சுத்தமான நீரைத்தான் பருகுவேன் என்பது கோட்பாடானால், Mineral water தான் சாப்பிடுவேன் என்பது கூடுதல் விருப்பமாகும். அதில் எப்பொழுதும் Mineral Water தான் பருகுவேன் என்பது கூடுதல் பேராசை ஆகும்". இங்கே கோட்பாடுடன் சில "கூடுதல்கள்" சேரும் போது தான் பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கும்.  

சில பேர் இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருப்பார். சில பேர் எப்படியும் வாழலாம் என்றிருப்பார். எது எப்படியோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நியாயமான எண்ணமிருந்தால் வாழ்க்கை கடினமாகாது. 

கதையை படிக்க தொடரவும்....

*********************

கருங்கல் ஜல்லி கறுப்புத் தார் கலவையை, மிக நேர்த்தியாக ஆவி பறக்க... பறக்க... ராட்சஷ இயந்திரம் நிலத்தில் கொட்டிக் கொண்டே போக... ஏழுமலை தனது முரடான பூட்ஸ் காலாலும், ஆயுதத்தாலும் சமன்படுத்தி தொடர்ந்து கொண்டிருந்தான். "கட மடா" சத்தத்துடன் மற்றொரு ராட்சஷ ரோடு ரோலர் அவன் பின்னால் உருண்டோடி வந்து கொண்டிருந்தது.
ஏழுமலை மனைவி மீனாட்சி, பூக்களுக்கு நீர் தெளிப்பதுபோல, தார் திவாலையை கற்கள் மேல் தெளித்து முன்னே போய்க் கொண்டிருந்தாள். கற்களும் பூக்கள் போன்று அந்த நடுநிசி நிலவு வெளிச்சத்தில் ஜொலி ஜொலித்தன.
"யப்பா குமாரு, கலவ சரியில்ல ஒழுங்கு மரியாதையா ஜோலிய பாரு.. இல்ல கொமட்ல குத்துவேன்... ராஜுக்கா ஆகட்டும், வீட்ல புருஷனுக்கு ஒண்ணும் ஆயிடாது. குல தெய்வம் பாத்துக்கும்.."
கான்ட்ராக்டர் யதுகுலராவ் விடிவதற்குள் திட்டமிட்டபடி வேலையை முடித்தாக வேண்டிய கட்டாயத்தில்... இயந்திரங்களின் சப்தத்தையும் மீறி காட்டுத்தனமாகக் கத்திக் கொண்டிருந்தார். அழுக்குச் சட்டை போட்டிருந்த அவரும் ஒரு தொழிலாளி போன்று காணப்பட்டார்.
ஏழுமலைக்கும் அவன் மனைவிக்கும் யதுகுலராவ் தெய்வம் போன்றவர்.
"சாமி, நீங்க இல்லேன்னா.. நாங்க இல்ல. உங்க கருணையாலதான் எங்க குடும்பம் பசி இல்லாம இருக்கு" என கையெடுத்துக் கும்பிட்டு நன்றி விசுவாசத்தை ஒவ்வொரு முறையும் காட்டும்போதும் ஏழுமலை கண்களில் கண்ணீர் திரளும்.
விவசாயத்துக்காக காத்திருந்து.. காத்திருந்து வயிற்றில் வரி விழுந்ததுதான் மிச்சம். பல வருடங்களாக மழை வேறு மாயாஜாலம் காட்டுகிறது. அண்டை மாநிலங்களும் தண்ணீர் காட்டுகிறது.
எலிக்கறி அவலத்தில் இருந்தும், தற்கொலையில் இருந்தும்.. தப்பித்துக்கொள்ள குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வேலை தேடி நாலாபுறமும் புறப்பட்டபோது, ஏழுமலை தெரிந்தவரின் சிபாரிசு மூலமாக ரோடு கான்ட்ராக்டர் யதுகுலராவிடம் வந்து சேர்ந்தான்.
"ஏழுமலை, நான் ரோடு கான்ட்ராக்டர். வேலை கொஞ்சம் கரடுமுரடானதாக இருக்கும், ராத்திரி பகல் மாறி மாறி வேலை பாக்க வேண்டியிருக்கும். உனக்கும் உன் சம்சாரத்துக்கும் சரிப்பட்டு வரும்னா, தாராளமா வேலையப் பார்க்கலாம்."
வேலை கிடைத்துவிட்டதை, ஏழுமலையால் நம்ப முடியவில்லை.
"என்னப்பா... அப்படியே நின்னுட்டே"
"பட்டணத்துல கூட நல்லவங்க இருக்காங்க. நீங்க தெய்வங்க.."
"எல்லோரும் நல்லவங்கதான்... ஏழுமலை"
பழக்கமில்லாத தொழில் என்றாலும், பழகிக்கொள்வதில் ஏழுமலைக்கும் மீனாட்சிக்கும் எந்த சிரமமும் இல்லை. பூட்ஸ் போட்டு கற்கள் மீது நடக்கும்போது ஏழுமலை தட்டுத்தடுமாறி விழுந்து... மீனாட்சியை விலா நோக சிரிக்க வைத்தான்.
"பொறந்த புள்ள கணக்கா... என்னய்யா கேலிக் கூத்து" என்றாள். போனில் இந்தச் சமாச்சாரத்தை கிராமத்தில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் மகனிடம் சொல்லி, அவனையும் சிரிக்க வைத்தாள்.
"கண்ணா நல்லா இருக்கியா... வேளைக்குச் சாப்பிடுறியா"
"ஆமாம்மா... ஸ்கூல்ல முட்டை எல்லாம் போடுறாங்க"
கான்ட்ராக்டர் செல்போனுக்குப் பாட்டியுடன் சேர்ந்து மகன் கண்ணன் போன் பண்ணுவதை இரண்டு நாளுக்கு ஒருமுறை மீனாட்சி எதிர்பார்ப்பாள். இவளும் வீட்டின் எதிரே இருக்கும் மளிகைக் கடைக்குப் போன் போட்டு வரச் சொல்லிப் பேசுவாள். அப்படியே கடனாக மளிகைச் சாமான்கள் கொடுக்கச் சொல்லி வேண்டுவாள். அவர்கள் சென்னைக்கு வந்து ஐந்தாறு மாதம் ஆகிறது. மாதம் தவறாமல் ஊருக்குப் போவார்கள். வேலை அதிகமாக இருக்கும் சமயத்தில் மீனாட்சி மட்டுமாவது போய் வருவாள்.
ஏழுமலை இந்த ரோடு போடும் வேலையை போகப் போக நேசிக்கவே ஆரம்பித்தான். திடீரென டாங்கிகளுடன் போருக்குப் புறப்பட்டுப் போவது போல மெஷின்களோடு சென்று, ரோடு போட்டு வந்த அழகை... பகலில் ஏழுமலை போய் பார்ப்பான்.
சலவை செய்த நீண்ட கறுப்புப் புடவை தரையில் காய வைத்தது போல என்ன அழகான காட்சி. நேற்று இல்லாத மாற்றத்தைப் பார்க்கும் பொதுமக்களின் முகம் மலர்வதையும், ஒரு கணம் ரசிப்பதையும் நெடுநேரம் ஓர் ஓரமாக நின்று ஏழுமலை ரசிப்பான். பாதசாரிகள் கொஞ்சம் மெல்ல நடந்து பூவின் மென்மையை உணர்வார்கள்.
ஏழுமலை போன்ற வெளியூர்க்காரர்களுக்கு வேலை கொடுத்தது போல தங்குவதற்கும் இடம் கொடுத்து இருந்தார் கான்ட்ராக்டர் யதுகுலராவ். வேன் வைத்து அழைத்துப் போவார்கள். வந்து விடுவார்கள். கடந்த இரண்டு நாட்களாக வேன் வரவில்லை. வேலையும் இல்லை.
"என்னங்க... ஏதேதோ பேசிக்கிறாங்க. ராஜுக்கா கூட இனிமே வேலை இருக்காதுன்னு நேத்து சொல்லிட்டுப் போச்சு. நாம என்ன பண்ணப் போறோம்?"
மீனாட்சி ஒருவித மிரட்சியுடன் கேட்டாள். வேலை இல்லாத பழைய நிலையை நினைத்துப் பார்க்கும் ஏழுமலை மனதுக்குள் பயம் தடம் பதித்தது. என்ன பதில் சொல்வது என ஏழுமலை தவித்துக் கொண்டிருந்தபோது, புழுதி பறக்கவிட்டு ஒருவித அவசரமாய் முதலாளி கார் வந்தது.
கதவைத் திறந்து அமைதியாக இறங்கிய யதுகுலராவ் வேட்டி சட்டையில் இருந்தார். இன்றும் வேலை இல்லையா?
"என்ன ஏழுமலை... எங்க உன் சம்சாரம்? பாவம்..! ஓய்வில்லாம வேலை பார்த்து ரொம்பக் களைச்சுப் போயிட்ட. உங்களுக்கு நல்ல சேதி. நம்ம டெண்டர் முடிஞ்சு போச்சு. புது டெண்டர் கிடைக்க கொஞ்ச நாளாகும். அதுவரைக்கும் ஊருக்குப் போய் சாதி சனத்தோட சந்தோஷமா இருங்க. வேலை அமைஞ்சதும் தகவல் தெரிவிக்கிறேன்."
தொழிலாளர்கள் துவண்டுவிடக் கூடாது என முதலாளி சாதுரியமாகப் பேசியது கிராமத்துக்காரனான ஏழுமலைக்குப் புரியாமல் இல்லை. தரவேண்டிய ஊதியத்துடன், பயணத் தொகையும் கொடுத்து வேட்டி சேலையும் கொடுத்தார்.
மகனுக்குப் பிடித்த விளையாட்டுப் பொம்மை இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்டு அன்றே ஊர் திரும்பினார்கள்.
அம்மா, அப்பாவை ஒன்றாகப் பார்த்த ஏழுவயது மகனுக்குத் தீபாவளி கொண்டாட்டம்.
"ஐ.. ஜாலி... எங்க ஸ்கூல்ல அடுத்த வாரம் ஆண்டு விழா. நீங்களும் வரணும் என்ன?" என்றான்.
மகனைப் பார்த்ததும், தங்களுடைய சோகம் மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். மீனாட்சியிடம் அவளது தாய் ரகசியமாக கேட்டாள். பெட்டி படுக்கையுடன் திரும்பியது அவளையும் கலவரப்படுத்தி இருக்க வேண்டும்.
"என்னம்மா மீனாட்சி... போன எடத்துலேயும் வேலை இல்லேனுட்டாங்களா?"
"அதெல்லாம் இல்லம்மா... நீ வேணா பாரேன்... கொஞ்ச நாள்ல கூப்பிடுவாங்க. நாங்க நல்ல பேரு எடுக்கிற மாதிரி உழைச்சிருக்கோம். முதலாளி பெரிய சிபாரிசு, செல்வாக்கு உள்ள மனிதர். டெண்டர் கிடைச்சதும் கூப்பிடுவார்" என்ற மீனாட்சியின் பேச்சில் பலமான நம்பிக்கை.
அப்பாவிடம், "நீங்க போடுற ரோடு எப்படிப்பா இருக்கும்" என்றான் கண்ணன்.
"ம்... உனக்கு நேத்து புது சிலேட்டு வாங்கிக் கொடுத்தேன் இல்ல. அது போல புத்தம் புதுசா கருப்பா இருக்கும்"
"அப்பா சென்னையில் கரண்டு கட் ஆகாதா... ஐஸ் வண்டிக்காரர் சொன்னாருப்பா"
"இங்கதான் கண்ணு. ஆறுமணி நேரம்னு சொல்லி வச்சு கட் பண்றாங்க. அங்க கட் பண்ண மாட்டாங்க"
பையன் பிரமிப்பாய்... கேள்வியும் பதிலுமாக அடுக்கிக் கொண்டே போக...
மளிகைக் கடை வேலை ஆள் தலை தெறிக்க ஓடி வந்து மூச்சு வாங்கினான். ஏழுமலை அவன் வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்தே விட்டான்.
இந்த இரண்டு மாதமாக மளிகைக்கு கடை பாக்கி ரூபாய் ஆயிரத்தைத் தாண்டி இருந்தது. அதைக் கேட்கத்தான் கூப்பிடுகிறாரோ?
"என்னங்க யோசனை... உங்களுக்குப் போன்"
ஏழுமலை, அந்தக் கடை ஆளைப் போல தலைதெறிக்க ஓடிப் போனவன், அடுத்த சில நிமிடங்களில் மூச்சு வாங்க திரும்ப வந்து மீனாட்சி முன் நின்றான். முகத்தில் மகிழ்ச்சி. வார்த்தையில் சந்தோஷம்.
"மீனாட்சி நம்ம கான்ட்ராக்டர்தான். வேலை ரெடி ஆயிடுச்சாம். நம்பளை உடனே நாளைக்கே புறப்பட்டு வரச் சொல்லிட்டார்."
"நம்ம ஊரு பால விநாயகன் கருணையில்தான் இதெல்லாம் நடக்குது. காசு வந்ததும் தேங்காய் உடைக்கணும்"
பாட்டி பேச்சைக் கேட்டு ஒழுங்கா நடந்துக்கணும் என மகனுக்கும், மகனைக் கவனமாகப் பார்த்துக்கணும் எனத் தாயிடமும் மீனாட்சி அறிவுறுத்தினாள். பிரியும் நேரம் நெருங்க நெருங்க பாசம் கூடித்தான் போகிறது. செல்ல மகனுக்கு முத்தம் கொடுத்தாள். பெற்றுக் கொண்டாள்.
தம்பதி சகிதமாக மூட்டை முடிச்சுக்களோடு இரவு கடைசி பஸ் பிடித்து, காலையில் முதலாளி முன் நின்றார்கள்.
ரோடு போட இயந்திரங்கள். உபகரணங்களுக்குப் பதிலாக பெரிய பெரிய சக்கரங்களில் மின்சார கேபிள்களும், மண் வெட்டி கடப்பாரையுமாக அந்த இடம் வேறு வேலைக்கான ஆயத்தத்தில் இயங்கிக் கொண்டிருந்ததை ஏழுமலை உணர்ந்தான். அவனுக்குப் பிடித்துப் போன தார் வாசனை எங்கே? பழைய ஆட்களை விட புதிய ஆட்களும் நிறையப் பேர் இருந்தார்கள்.
"என்ன ஏழுமலை அப்படி பாக்கறே... இந்த முறை ரோடுபோடுற டெண்டர் கிடைக்கல. விடுவேனா? ரோட்டுல கேபிள் பதிக்கிற டெண்டர் வாங்கிட்டேன். சந்தோஷமா, நாம ரோடு போட்டோம் இல்ல. அதே ரோட்டுல ஆங்காங்கே வெட்டி கேபிள் பதிக்கணும்" என கான்ட்ராக்டர் யதுகுலராவ் சிரித்தார்.
ஏழுமலை அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான். "என்னங்கய்யா சொல்றீங்க?"
"ஆமாம் ஏழுமலை. அதுவும் ஒரு வேலைதானே... சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு. பூஜை போட்டு ஆரம்பிச்சிடுவோம்"
"நாம அழகழகா போட்ட ரோட்டை நாமளே வெட்டி கேபிள் பதிக்கணுமா.. ஐயோ... என்னால முடியாதுங்க... முடியாது" பதறிப் போய் துவண்டவனாய் அதே இடத்தில் உட்கார்ந்த ஏழுமலை சிறுபிள்ளை மாதிரி, கேவி கேவி அழவும் ஆரம்பித்துவிட்டது யதுகுலராவை திகைக்க வைத்தது.
"முதலாளி... பச்சப்புள்ள முகம் மாதிரி அந்த ரோடுதாங்க என் மனசுல பதிஞ்சிருக்கு. அதைப் பாலம் பாலமா வெட்ட என்னால முடியாதுங்க. பலநாள் கண்முழிச்சு வியர்வை சிந்த நாம் வேலை பார்த்தோம். அந்த உழைப்பை நாமளே மதிக்கலைன்னா வேறு யார் மதிப்பாங்க?"
ஏழுமலை அழ மறந்து அவனையறியாமல் புலம்பவும் செய்தான்.
"மெத்த படிச்சவங்களும், மெத்தனமா நடந்துக்கறாங்க. நடவு நட்டதுக்கு அப்புறம் யாராவது உழுவாங்களா.. மொதல்ல கேபிள் பதிச்சிக்கிட்டு... பிறகு இல்ல ரோடு டெண்டர் அறிவிக்கணும்? குரங்கு கையில கிடைச்ச பூமாலை மாதிரி குதறிப் போடுற வேலை பாக்குறதுக்குப் பதில் பட்டினி கெடந்து சாகலாம். எனக்கு உங்க வேலையும் வேணாம். பொல்லாத கூலியும் வேணாம். எங்களை விட்டுருங்க. ஊருக்குப் போயிடறோம்."
மூட்டை முடிச்சுகளுடன் தெருவில் இறங்கி நடக்கும் ஏழுமலையும் அவன் மனைவியையும் மேலும் திகைத்துப் போய் பார்த்து நின்றார், கான்ட்ராக்டர் யதுகுலராவ்.
மேலிட சிபாரிசு பிடித்து, இந்தக் கேபிள் பதிக்கிற வேலையை வாங்கியிருந்தார். பணம் கிடைக்கிறது என்பதற்காக எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாமா? ஏழுமலை கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட் யதுகுலராவைப் பலமாக யோசிக்க வைத்தது.
ரோடு போடுவது என்பது ஆக்கல். போட்ட ரோட்டில் பள்ளம் தோண்டுவது என்பது அழித்தல். ரோட்டை உருவாக்கியவனே அதை அழிக்கலாமா?
ஒரு கூலிக்காரனிடம் இருக்கும் நியாய உணர்வு தனக்கில்லாமல் போச்சே.. யதுகுலராவ் தூரத்தில் போய்க் கொண்டிருந்த ஏழுமலையையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
******************
கதைபகுதி :
நன்றி : http://www.koodal.com/tamil/stories/short-stories.asp?id=642&content=tamil&name=road-workers

No comments:

Post a Comment