ஆசை நூறு வகை
மேற்கண்ட வார்த்தையிலிருந்து தொடங்கும் ஒரு திரைப்பட பாடலை நாம் கேட்டிருப்போம். சூப்பர் ஸ்டார் அவர்கள் நடித்து வெளியான "அடுத்த வாரிசு" எனும் திரைப்படத்தில் தான் இந்த உடல் பாகங்களையெல்லாம் துடிக்க வைக்கும் கிளு கிளு பாடல் காட்சி உள்ளது.
இப்படி இந்த நூறு வகை ஆசைகளையும் அதை கொண்டுள்ள உடலும் எங்கிருந்து எப்படி வருகின்றன என்பதை அறிய யாருக்காவது ஆவலாக உள்ளதா?
மேற்கொண்டு படியுங்கள் .....
பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. மனிதனும் அவனது நிழலும் போல் ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. மனத்தின் செயல்பாடுகளால் அது இந்த உடம்பில் வருகிறது.
- பிரச்ன உபநிஷதம்-3:3
பிராணன் இறைவனிடமிருந்து தோன்றியது. எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக இருக்கிறார். எனவே பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது.
ஆன்மாவிற்கும் பிரானனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
மனிதனும் அவனது நிழலும் போல்என்கிறது மந்திரம். நிழல் மனிதனிலிருந்தே உண்டாகியது. நிழலுக்கென்று ஒரு தனி இருப்பு கிடையாது. அதே வேளையில் மனிதனிலிருந்து நிழலை பிரிக்கவும் முடியாது. அவ்வாறு பிராணனும் ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதது.
பிராணன் எப்படி இந்த உடம்பில் வருகிறது?
ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாததாயிருக்கின்ற பிரானனுக்கென்று ஒரு தனி வரவு கிடையாது. உடம்பில் ஆன்மா இருக்கிறது என்றால் பிராணனும் இருக்கிறது.
பிராணன் எவ்வாறு இந்த உடம்பை உருவாக்குகிறது?
மனத்தின் செயல்பாடுகளால். அதாவது, மனத்தின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், அனுபவங்கள் ஆகியவைகளின் தொகுதிகளுக்கு ஏற்ப பிராணன் உடம்பை உருவாக்கி தருகிறது. அது போலவே, அந்த உடம்பை செயல்படுத்தவும் செய்கிறது.
"நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும் நம் மனதில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அதை சமஸ்கிருதத்தில் சம்ஸ்காரம் என்கிறார்கள். மரணத்திற்குப் பின், ஒரு மனிதன் போகும் இடத்திற்கு வழி காட்டுவது, அவனது சம்ஸ்காரங்களின் கூடுப்பலனே.
ஒருவன் இறக்கிறான், உடல் வீழ்ந்து பஞ்ச பூதங்களுடன் கலந்து விடுகிறது. அப்போது சம்ஸ்காரங்கள் அழிவதில்லை. அவை மனத்துடன் சேர்ந்திருக்கின்றன. மனம் மிக நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பதால், அது அவ்வளவு விரைவாக அழிவதில்லை. ஏனென்றால் ஒரு பொருள் எவ்வளவு நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நிலைத்ததாகவும் இருக்கிறது.....
சுழல் காற்றானது பல திசைகளிலிருந்து வரும் பல காற்றோட்டங்கள் ஓரிடத்தில் சந்தித்து, ஒன்று சேர்ந்து, சுழல ஆரம்பிக்கின்றன. அவ்வாறு சுழலும் போது காகிதம், வைக்கோல் போன்றவற்றைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு புளுதிப்புயலாக மாறுகின்றன. வேறோரிடத்தில் அவற்றை உதறி விட்டு, வேறு பொருட்களை இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறே தங்கள் வழியில் இருக்கும் பொருட்களைக்கொண்டு, பலவிதமான புளுதிப்படலங்களை உருவாக்கியவாறே செல்கின்றன.
'அதைப்போலவே, பிராண சக்திகள் ஒன்று சேர்ந்து ஜடப்பொருளிலிருந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. பிறகு உடல் விழும் வரை சுழன்று செல்கின்றன. விழுந்ததும், மறுபடியும் வேறு பொருட்களிலிருந்து வேறு உடலையும் மனதையும் உருவாகுகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஜடப்பொருள் இல்லாமல் சக்தியால் பயணம் செய்ய முடியாது. எனவே உடல் வீழ்ந்தவுடன் மனமாகிய பொருள் எஞ்சி நிற்கிறது. பிராணன் சம்ஸ் கார வடிவில் மனத்தின் மீது செயல்படுகிறது. பிறகு பிராணன் வேறோர் இடத்திற்குப் போய் புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாகிக்கொண்டு மறுபடியும் இதே போல் செயல்படுகிறது. இப்படியே தன்னுடைய சக்தி முழுவதும் செலவழியும் வரை இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் பிறகு தான் அது கீழே விழுகிறது. அதன் செயலும் முடிகிறது.'
- சுவாமி விவேகானந்தர் (ஞான தீபம் 3. 27-28)
ஆசைகளை அழிக்க நினைத்தால் அது அழியாது. மாறாக ஒரு ஆசையிலிருந்து வேறொரு ஆசையாக மாற்ற வேண்டும். அதாவது அழிகின்ற ஆசையிலிருந்து அழியாத ஆசையாக மாறிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக இந்த உலகின் தலையாய ஆசைகளான "மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை" இவைகளை எப்பொழுதும் கொண்டிருந்தால், இவ்வாசைகள் நம்மை (மனதை) விட்டு போகும் வரை / சலித்து விடும் வரை மறுபடியும் மறுபடியும் பிறந்து இவாசைகளை அடைய கர்மங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்க்கு பல பல பிறவிகள் பல நூறு / ஆயிரம் வருடங்கள் கழிய வேண்டும்.
இதே ஆசைகள் குறுகிய அளவு இருந்தால், அதாவது மண்ணாசை நமக்கு/ நம் சந்ததியருக்கு தேவையான அளவு இருந்தால் அது எளிதில் நிறைவேறுவதாக இருக்கும். வாழ்க்கையும் இனிக்கும். ஆனால் இந்த மண்ணாசை அளவுக்கு அதிகமாக இருந்தால் அது நிறைவேற நாம் கடினமாக மாற வேண்டும். அதனால் வாழ்க்கையும் கடினமாகும். பிறவியும் நீண்டு கொண்டே போகும்.
இதே போல் பொன்னாசை, பெண்ணாசை இவைகள் தேவையான அளவோடிருந்தால் (இங்கே அளவு என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடாது) அதாவது ஒருவர் உடலில் பொதுவாக எவ்வளவு பொன் போட்டுக்கொள்ள முடியுமோ அவ்வளவு இருந்தால் அதுவே அளவு. அதே போல் ஒருவர் ஒருவரிடம் அன்பு கொள்ள ஒருவரே போதும் என்றிருந்தால் அதுவே அளவு.
இந்த ஆசைகளுகேற்ற படி கால நேரங்கள் வானில் உள்ள கிரகங்களின் சுழற்சிப்படி மாறும். உதாரணமாக ஒருவருக்கு உடல் இன்பத்தின் மீது தீராத ஆசை இருக்குமானால் அவர் இன்பத்தின் காரகரான "சுக்கிரன்" மீனத்தில் உச்சமாக (Exaltation) வரும் போது / துலாத்தில் ஆட்சியாக (Ruling) வரும் போது பிறக்க நேரும். அதே ஆசை விபரீதமாக (வித விதமான உடல்களுடன்) என்றிருந்தால் அதே சுக்கிரன் நீச்சமாக (Debilitation) கன்னியில் வரும் போது பிறக்க நேரிடும். இவைகள் வேறு சில அமைப்புகளாகவும் / வேறு சில கிரங்களின் இணைப்பு / பார்வை / பரிவர்த்தனை படியும் மாறுபடும்.
ஆனால் ஆசைகள் நிறைவேறும் . அவைகளை ஒழுங்கு படுத்தினால் நாம் மேன்மையடையலாம்.
மேலே சொன்ன யாவுமே அழிகின்ற ஆசைகள் (எவ்வளவு அளவானாலும் சரி).
அழியாத ஆசைகள் என்ன தெரியுமா?
நாம் கடவுளின் மீது கொள்ளும் தூய பக்தி ஒன்றே. அது தான் எல்லோருக்கும் இறுதி இலக்காகும். அது தான் நம்மை இந்த பிறவியில் இருந்து விடுவிக்கும் மாபெரும் சக்தியாகும்.
No comments:
Post a Comment