பயங்கர ஆயுதம்
"கத்தியின்றி ரத்தமின்றி" என்கிற வார்த்தையை நாம் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். நம் பாரத நாட்டினை ஆங்கிலேய சர்வாதிகார பிடியிலிருந்து விடுவிக்க எண்ணற்ற சுதந்திர போராட்ட தியாகிகள் தங்கள் உயிர், உடைமை , இருப்பிடம் இவை எவற்றையும் பாராது காந்திய வழியில் "கத்தியின்றி ரத்தமின்றி" நீண்ட அறப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.
கத்தியும் ரத்தமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.அதாவது கத்தி போன்ற ஆயுதத்தால் தான் ரத்தத்தை வரவழைக்க முடியும். அப்படி கத்தியும் ரத்தமும் சேர்ந்தால் என்ன ஏற்படும் ?
வலி, வேதனை, காயம்
போன்ற இதே உணர்வுகளை ஏற்படுத்தும் ,
ஆனால் இதை விட ஒரு பயங்கர ஆயுதம் அதுவும் கண்ணுக்கு தெரியாத ஆயுதம் ஒன்று இருக்குமென்றால் அது என்ன ?
அகங்காரம்
************
எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் என் மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
**************
இந்த அகங்காரமானது மனிதர்களிடையே சர்வ சாதாரணமானது. அது எப்படிப்பட்ட ஆயுதம் என்று அவர்களுக்கே புரியாதது. இந்த அகங்காரம் எப்படி வருகிறது ?
அதிக பணத்தினால் ,
பெரிய பதவியினால் ,
அளவுக்கதிகமான பெருமையினால் ,
அபரிமிதமான தன்னம்பிக்கையினால் ,
கட்டுப்பாடற்ற சுயநலத்தினால் ,
தேவையற்ற அலட்சியத்தால்.........
தேவையற்ற அலட்சியத்தால்.........
- இப்படியே சொல்லிக்கேண்டே போகலாம்.
அதிக பணம் அதை வைத்துள்ளவரை, எவரையும் பணத்தால் விலைக்கு வாங்கி தன் காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்கிற அகங்காரம் ஆட்கொள்கிறது.
பெரிய பதவியிலிருப்பவரை, தனக்கு பிடிக்காத எவரையும் பதவியால் வீழ்த்தி தன் விருப்பத்தை நிறைவேற்றி கொள்ளலாம் என்கிற அகங்காரம் ஆட்கொள்கிறது.
அளவுக்கு அதிகமான பெருமையுடையவரை, தன்னைச் சுற்றியுள்ளவரிடம் பெருமையை பேசி தன் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்கிற அகங்காரம் ஆட்கொள்கிறது.
அபரிமிதமான தன்னம்பிக்கையால், எவரையும் துச்சமாக எண்ணி மனம் போன படி நடக்கலாம் என்கிற அகங்காரம் வருகிறது.
கட்டுப்பாடற்ற சுயநலத்தால் , எவர் சொல்லும் கேளாமல் தான் செய்வதே நியாயம் என்கிற அகங்காரம் வருகிறது.
தேவையற்ற அலட்சியத்தால் , எவருக்கும் பணியாமல் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற அகங்காரம் வருகிறது.
மேற்கூறிய எல்லாவும் ஒன்று சேர்ந்து விட்டால் ...? நிலைமை மிகவும் துன்பமாகும்.
ஜாதகரீதியாக ஒருவர் லக்னத்தில் சனி , செவ்வாய் , ராகு இவர்களில் இருவரோ , மூவரோ இருந்து விட்டால் ஆணவமாக நடப்பார். அது எந்த லக்னம் , கிரகங்கள் நின்ற நட்சத்திரம் , பெறுகின்ற சுபர் பார்வை , நடக்கின்ற தசை இவைகள் பொறுத்து ஆணவத்தின் அளவு மாறுபடும். இவர்களே நான்காம் இடத்திலோ,எட்டாம் இடத்திலோ அமர்ந்து விட்டால் நிலைமை வேறு விதமாகும் .எட்டாம் இடமானால் அவர் உயிருக்கே உலை வைத்து விடுவார்கள். (நாம் சரியாக / நியாயமாக நடந்து கொண்டால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.)
இதோ இதைப்பற்றிய ஒரு கதை...
மலையேறுவதில் ஆர்வம் மிக்க ஒரு சராசரி இளைஞன் , ஒரு நாள் தான் இதுவரை செய்யாத சாதனை செய்ய விரும்பி ஒரு உயரமான மலையை தேர்ந்தெடுத்து அதில் தனியாக ஏற முற்பட்டான். பாதுகாப்பு உபகரணங்களை (கயிறு, கண்ணாடி, கையுறைகள், உலோக கொக்கிகள், கத்தி போன்றன) பயன்படுத்தி அவன் அடிவாரத்திலிருந்து ஏற துவங்கினான்.
முதலில் எளிதாக இருந்தாலும் போகப்போக சற்று கடினமாக மாறியது. அது பனிக்காலம் என்பதால் குளிரும் உறைபனியும் சேர்ந்து அவனை வாட்டியது. மேலும் மலை உச்சியை தொடுவதற்கு ஆகும் நேரத்திற்கு முன்பாகவே இருள் சூழ துவங்கியது. அவனுக்கு மிகவும் களைப்பும் வலியும் ஏற்பட்டது. ஆனால் உச்சியை அடைய சில நிமிடங்கள் இருக்கும் போது துரதிர்ஷ்ட வசமாக தான் இடுப்பில் கட்டியிருந்த கயிறு வழுக்கி தன் பிடியை விட நேரிட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளில் அந்த இளைஞன் "ஓ" என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் திடீரென்று கையில் ஏதோ ஒன்று தட்டு பட அதை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.
அவனுக்கு சராசரி கடவுள் நம்பிக்கை இருந்ததால் அப்பொழுது கடவுளிடம் ஒரு கணம் தோன்றி தம்மை காப்பாற்ற வேண்டினான். அவனுக்கு நிறைய வியர்த்திருந்தது. அப்பொழுது கடவுள் சிறு ஒளி வடிவில் அவன் முன்னே தோன்றி "என்னிடம் உனக்கு நம்பிக்கை உண்டென்றால் இப்பொழுது பற்றியுள்ள கைகளை எடுத்து விடு தப்பித்து விடுவாய் " என்று கூறி விட்டு மறைந்தார். . ஆனால் அவனோ இந்த இருளில் தான் பார்த்தது பிரமையா என நினைத்து கையை எடுத்து விட்டால் மறுபடியும் எங்கே போய் விழுவோம் என்று தெரியாததால் கொஞ்ச நேரம் தாக்கு பிடித்து வெளிச்சம் வந்ததும் தப்பி விடலாம் என்றெண்ணி அப்படியே இருந்து மிக்க பயத்தினாலும் களைப்பினாலும் இறந்தே போனான்.
மறு நாள் அவனை சடலமாக கண்ட மலை வாழ் மக்கள் மிகவும் வேதனை அடைத்தனர். காரணம் .....
அவன் பிடித்து கொண்டிருந்தது ஒரு உறுதியான மரக்கிளை.
அந்த மரகிளைக்கும் தரைப்பகுதிக்கும் இடையே உள்ள தூரம் 10 அடி தான்."
இந்த கதையில் எது அவனை உயிர் பிழைக்க விடாமால் தடுத்தது?
அபரிமிதமான தன்னம்பிக்கையால், காப்பாற்ற வந்த கடவுளையும் துச்சமாக எண்ணி சந்தேகம் கலந்த அகங்காரம் தான் அவன் உயிர் பிரிய காரணமானது.
No comments:
Post a Comment