தடுக்கின்ற விதி
மனிதர்களுக்கு மனம் என்று ஒன்று இருப்பதனால் தான் "உளைச்சல்" என்று வருகிறது. உண்மையில் மனம் என்றால் "எண்ணங்களின் தொகுப்பு" எனலாம்.
அதாவது மனிதர்களுக்கே உரித்தான பகுத்தறிவின் பொருட்டு எண்ணங்கள் ஏற்படுகிறது. அந்த எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். எல்லோருக்கும் அடிப்படை உருவம் ஒன்றுபட்டாலும் அதன் அமைப்பு, நிறம், தரம் (ஆரோக்கியம்) என்பவை வித்தியாசப்படுவது போல எண்ணங்களும் வித்தியாசப்படுகிறது.
எல்லாவற்றிலும் நல்லவை , தீயவை என்று இருப்பது போல எண்ணங்களிலும் உண்டு. இவற்றில் குறிப்பிட்ட பகுதி "பிறவி குணமாக " வருகிறது. மீதமுள்ள பகுதி பிறக்கும் குடும்பம் , வசிக்கின்ற இடம் , வளரும் சூழ்நிலை பொறுத்து வந்து சேரும்.
சில பேர் நான் அந்த புகழ் பெற்ற பணக்கார வீட்டில் பிறக்காமல் போய் விட்டதே, இப்படி இந்த வீட்டில் பிறந்து கஷ்டப்படுகிறேனே என்று நொந்து கொள்வார்கள். உண்மையில் அங்கு பிறந்திருந்தால் கஷ்டம் வேறுவிதமாக இருந்திருக்கும். அப்படி இருந்திராவிட்டால் உண்மையில் நாம் செய்த புண்ணியம் எனலாம். இது தான் உண்மை.
நமக்கு நம்முடைய உருவம் , நம்முடைய பெற்றோர் ஆகியோரையே தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை என்பார். ஆனால் எண்ணங்களால் நிச்சயம் முடியும். இதற்கு கடந்த காலத்தை விட்டு விட வேண்டும். இனிமேல் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை திரும்ப திரும்ப நினைக்க வேண்டும்- இடைவிடாது. இவைகள் நமக்குள் நன்றாக ஊடுருவி அடுத்த பிறவியை தீர்மானம் செய்யும்.
பிறவிகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து வேறு பக்கங்களுக்கு சென்று விடவும்.
ஒரு பெண்ணின் மன அழுத்தத்தை பாடலாக காண்பதற்கு பின்வரும் "இணைப்பை" தொடரவும்.
லலிதா என்னும் தமிழ் திரைப்படத்தில் (1976 ஆம் ஆண்டு) வரும் இப்பாடலில் மிகவும் பிடிவாத குணம் கொண்ட கதா பாத்திரமாக வரும் லலிதா, தன் கணவனின் மீது கொண்ட வீண் வெறுப்பினால் தீவிர மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு இருக்கும் நேரத்தில் இனிமையாக தோன்றும் பாடல்....
"வசந்தங்கள் வரும் முன்னே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
பொன்னானாள் விலையில்லை
கண்ணானாள் இமையில்லை"
"மனச்சின்னம் கழுத்தோடு சிரிக்கின்றதே
மனத்திண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே
நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே
தடுக்கின்ற விதி ஏதோ தடுக்கின்றதே"
இங்கே மன அழுத்தத்தை வைத்து கொண்டு விதியின் மீது பழி போடுவது நியாயமல்ல என்றாலும், விதி தான் வலியது என்பதை நினைவில் கொள்ளவும்.
எல்லாவற்றிலும் ஒரு அளவு இருந்தால் நன்றே. அது போல மன அழுத்தமும் இருக்கட்டும்.
*********************
மன உளைச்சல் என்பது ஓரளவுக்குத் தேவைதான். அப்போதுதான் நாம் மேலும் சிந்தித்து திறமையாகச் செயல்படுவோம். ஆனால், இது அளவை மீறினாலோ, நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தாலோ அது உடலுக்கும் கேடு, மனதுக்கும் கேடு.
தீவிர மன உளைச்சல், இதயத்தை வேகமாக துடிக்க வைக்கலாம். தசைகளை இறுக வைக்கலாம். தலைவலி, வயிற்றுவலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். பசியின்மை ஏற்படலாம் அல்லது அதிகமாக சாப்பிட வைக்கலாம். தூக்கம் வராமல் தவிக்க வைப்பதும் உண்டு. எளிதில் சோர்வு உண்டாகும். தேவையில்லாமல் பிறரிடம் எரிந்து விழத் தோன்றும்.
மாரடைப்பு, நரம்புத் தளர்ச்சி, மனநோய் என்று பல சிக்கல்களில் நம்மைக் கொண்டுவிடக்கூடிய மனஉளைச்சலை எப்படித் தவிர்ப்பது?
சுகாதார அமைச்சகம் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது...
உங்கள் நேரத்தை நன்கு திட்டமிட்டுச் செலவிடுங்கள்
உங்கள் வாழ்க்கையை மேலும் ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். முக்கியத்துவப்படி அவற்றை வரிசைப்படுத்துங்கள். ஒவ்வொரு காரியத்துக்கும் எவ்வளவு நேரத்தைச் செலவிடுவது என்பதை முடிவு செய்யுங்கள்.
மாற்றங்களைப் படிப்படியாக மேற்கொள்ளுங்கள்
ஒரு மாற்றத்திலிருந்து இன்னொரு மாற்றத்திற்குப் போதுமான இடைவெளி கொடுங்கள். உதாரணத்திற்கு, திருமணம் செய்வது, வீடு வாங்குவது, வேலையை மாற்றுவது ஆகிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டாம்.
உங்களால் முடிந்ததை மட்டும் செய்யுங்கள்
உங்கள் திறமை, ஈடுபாடு ஆகியவற்றை உணர்ந்துகொண்டு அவற்றிற்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள். சாதிக்கக்கூடிய இலக்குகளை வகுத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் எரிச்சலையும், சோர்வையும் தவிர்க்கலாம்.
விவேகத்துடன் முடிவெடுங்கள்
தேவைப்படும் எல்லா தகவல்களையும் முதலில் திரட்டிக் கொண்டு பிறகு முடிவெடுங்கள். முக்கிய முடிவுகளை நன்கு ஆலோசித்துவிட்டு எடுக்க வேண்டும். உங்கள் முடிவால் பாதிக்கப்படுவோரையும் கலந்து ஆலோசியுங்கள்.
நீங்கள் எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் தோற்றம், உயரம், நிறம் இவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். மாற்ற முடியாததை ஏற்கப் பழகிக் கொள்ளுங்கள்.
ஆக்கப்பூர்வமாகச் சிந்தியுங்கள்
தேவையில்லாத எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அந்த எண்ணங்களுக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து அவற்றைக் களையுங்கள். சிறு நிகழ்ச்சிகளை அளவுக்க மீறி பெரிதுபடுத்த வேண்டாமே.
உங்கள் பிரச்னைகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களது கவலைகளையும், பிரச்னைகளையும் மனதுக்குள் தேக்கி வைக்காதீர்கள். உங்கள் மனைவி அல்லது கணவர், நண்பர், மேலதிகாரி அல்லது சமயத்தலைவர் ஆகியோரிடம் பேசுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை ஒருவேளை அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். பிரச்னை தீர அவர்கள் யோசனை வழங்கலாம்.
மகிழ்ச்சிகரமான குடும்பத்தை உருவாக்குங்கள்
குடும்ப உறுப்பினர்களிடம் அன்பும் பரிவும் அடக்கமும் காட்டுங்கள். நண்பர்களிடம் எப்படி நடந்துகொள்வீர்களோ, அதேபோல் அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள். சிரமமான நேரங்களில் அவர்கள் ஆதரவு வழங்குவார்கள். அவர்களுடன் பேச, விளையாட அல்லது உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
மகிழ்ச்சிகரமான குடும்பம் தேவைப்படுவது போலவே, நண்பர்களும் தேவை. அவர்களின் கருத்துக்களை மதியுங்கள். குறைகளைப் பொறுமையுடன் அணுகுங்கள். சில நேரங்களிலாவது விட்டுக்கொடுங்கள் - நீங்கள் சொல்வதுதான் சரியென்ற போதிலும்.
ஆரோக்கியமாக வாழுங்கள்
உடற்பயிற்சி, முறையான உணவு, போதுமான தூக்கம் ஆகியவற்றின் மூலம் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மன உளைச்சலைப் போக்க என்றபடி சிகரெட்டையோ, மதுவையோ ஒருபோதும் நாடிச் சொல்லவேண்டாம்.
உங்களுக்காகக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்
நாணயம் சேகரிப்பதோ, எழுதுவதோ அல்லது விளையாடுவதோ - உங்களுக்கு உண்மையிலேயே பிடித்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். ஓய்வெடுத்துக் கொள்வதுகூட உங்களுக்கான நேரம்தான்.
சில ஆசுவாச முறைகளைப் பழகிக் கொள்ளுங்கள்
ஆழமாக மூச்சுவிடுவது, தியானம், தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பது, மூளைக்கு ஓய்வு கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மன உலைச்சலைக் குறைக்க உதவும். இவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
I. ஆழமாக மூச்சுவிடுவது:
1. உங்கள் கால்களை அகற்றிவைத்து கைகளைத் தொளதொளவென்று பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
2. கண்களைமூடி தலையை முன்னே சாயுங்கள்.
3. மூக்கு வழியே மெதுவாக மூச்சை உள்ளே இழுங்கள். காற்றை ஆழமாக சுவாசியுங்கள். முதலில் வயிற்றுப் பகுதியையும், பிறகு சுவாசப் பகுதியையும் விரிவடையச் செய்யுங்கள்.
4. கொஞ்ச நேரத்துக்கு லேசாக மூச்சைப் பிடியுங்கள்.
5. மூக்குவழியே மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். உங்களுக்கு வேண்டிய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
6. ஆசுவாசப்படும்வரை ஆழமாக மூச்சுவிடும்வரைத் தொடருங்கள்.
7. பின்னர் மெதுவாகக் கண்களைத் திறவுங்கள்.
II. தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பது:
1. வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
2. கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
3. ஒரு கையை இறுக்கமாக மடக்குங்கள். சில விநாடிகளுக்கு அப்படியே வைத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்துங்கள்.
4. பிறகு மிக மெதுவாக அந்த இறுக்கத்தைத் தளர்த்துங்கள். பதற்றங்கள் பறந்தோடுவதை நீங்கள் உணர்வீர்கள்.
5. முகம், கண்கள், தோள்பட்டை, வயிற்றுப்பகுதி, புட்டம், கை, கால் ஆகிய எந்தப் பகுதிக்குமே இந்தப் பயிற்சி பொருந்தும்.
III. மூளைக்கு ஓய்வு கொடுக்க சில வழிகள்:
மூளைக்கு ஓய்வு கொடுத்தால் மன உளைச்சல்கள் பலவற்றிற்குத் தீர்வு காணலாம். அது எப்படி மூளைக்கு ஓய்வு கொடுப்பது?
1. சுகமான மெல்லிசையைக் கேளுங்கள்.
2. வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாம். அல்லது கீழே படுத்துக்கொள்ளலாம்.
3. கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
4. தசைகள் அனைத்தையும் தொய்வாக்கி உங்கள் உடலை லேசாக்கிக் கொள்ளுங்கள்.
5. மலை அருவி, அலைகள், தென்றல் தொடும் இலைகள் இப்படி மனதுக்கு இதமான காட்சியைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
6. விருப்பப்பட்டால் ஆழமாக மூச்சுவிடுங்கள்.
7. மிக அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணரும் வரை, மேலே கூறப்பட்டுள்ளவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள்.
***********************
***Part***Thanks :
http://www.koodal.com/health/interview_guide.asp?id=87&title=health-tips-mental-stress
No comments:
Post a Comment