விநாயக பெருமானின் சமயோசித புத்தி
திருவிளையாடல் என்னும் திரைப்படத்தில் வரும் இந்த ஆரம்ப காட்சியை நாம் அனைவரும் அறிவோம். அதாவது நாரதர் கொண்டு வரும் "ஞான பழத்தை" யார் பெறுவது என்கிற போட்டியில்- யார் உலகை முதலில் சுற்றி வருகிறாரோ அவருக்கே பழம் என்கிற அடிப்படையில் விநாயக பெருமானும், முருக பெருமானும் போட்டியில் கலந்து கொண்டு, முருக பெருமான் மயிலேறி உலகை சுற்றி வர புறப்பட்டிட விநாயக பெருமானோ அன்னை தந்தையர் தான் உலகம் என்கிற தத்துவத்தில் அவர்களையே எளிதில் சுற்றி வந்து ஞான பழத்தை பெறுகிறார்.இந்த காட்சியில் விநாயக பெருமானின் சாதுர்யமும், சமயோசித புத்தியும் வெளிப்படுகிறது. அதாவது விநாயக பெருமான் இங்கு சற்று குறுக்கு வழியை (Short Cut) கையாள்கிறார். நெருக்கடியான நேரத்தில் பிரச்னையை ஒரே கோணத்தில் பார்க்காமல், சற்று வித்தியாசமாக அதே சமயத்தில் அடிப்படையை விட்டு விலகாமல் சிந்தித்து, போட்டியின் பொருளை உணர்ந்து அதில் வெற்றியும் பெறுகிறார்.
இதே போன்று தான் மனித வாழ்க்கையும். அனுதினமும் எத்தனை பேருக்கு எத்தனை போட்டிகள் எத்தனை விதங்கள்! இந்த காட்சியின் பொருள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு எளிதாகவும் அதுவும் அருகிலேயே இருக்கும் / இருக்கலாம். அதனை நாம் நன்றாக யோசித்து, சிந்திக்கும் திறனை பெற்றிருந்தால் வாழ்க்கை போட்டியில் வெல்லலாம்!
தற்போதைய உலகில் சில பேர் கவலையில் இருந்து ஆறுதல் பெற கோவில் கோவிலாக சுற்றி வந்து கொண்டிருப்பார். ஆனால் வீட்டினில் அவர்களை சார்ந்தவர்- பெற்றோரோ / துணைவரோ / பிள்ளைகளோ கவனிப்பாறின்றி கிடப்பர். இப்படி தர்மத்தை விட்டு செய்யும் எந்த செயலையும் எம்பெருமான் ஏற்பதில்லை. மாறாக அவர்களை நன்றாக கவனித்து கொள்வதன் மூலம் நாம் பல கோவில்களை சுற்றி வந்த பலன் பெறலாம்- நாம் நேரிடையாக கோவிலுக்கு செல்லாமலேயே.
சில பெண்கள் (வயதில் மூத்த) அம்மன் கோவில் பல முறை சுற்றி வந்து கொண்டிருப்பார். அனால் வீட்டில் உள்ள மருமகளை கொடுமை செய்து வருவார். என்ன பயன்? புண்ணியமும் தர்மமும் நமக்கு அருகிலேயே தான் இருக்கும். இதனை புரிந்து கொண்டு சமயோசிதமாக நடப்பது நம்மிடமே உள்ளது.
உலகில் எல்லா செயலும் கர்ம வினைகளை அனுபவிக்கவே நடக்கின்றன.
அதனையும் சமயோசிதமாக நாம் செயல் பட்டால் கர்ம வினைகளிலிருந்து ஓரளவு விடுபடலாம். அதற்கு நமக்கு பரிபூரண ஞானம் வேண்டும்.
கிறிஸ்தவர்களின் வேதம் சொல்கிறது " கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று.
மேலே சொல்லப்பட்ட விஷயத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து மன்னிக்கவும். ஏனெனில் ஒவ்வொருவர் பிரச்சனை, நோக்கம் அவரவர்க்கே புரியும்.
எல்லா துன்பங்களும் தீர இந்நாளில் விநாயக பெருமானை நினைப்போம். தக்க ஞானம் பெறுவோம். வாழ்க்கை போட்டியில் வெற்றி பெறுவோம்!
No comments:
Post a Comment