நல்லொழுக்கத்தை மேம்படுத்துங்கள் !
அடியார்
சபரிமலை செல்பவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே, சுத்தம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டுகிறேன்.
சற்குரு
சுத்தம் என்றால் பொதுவாக உடல் சுத்தம், மன சுத்தம் என்று சொல்வார்கள். ஆனால், சித்தர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கையையே சுத்தம் என்று சொல்கிறோம். நீ எந்த அளவிற்கு இறை நம்பிக்கை கொண்டுள்ளாயோ, கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறாயோ அந்த அளவிற்கு நீ சுத்தமாக இருக்கிறாய் என்று அர்த்தம். நீ ஐயப்பன் இருக்கிறான் என்று நம்பினால் ஐயப்ப விரதம் பூண்டிருக்கும்போது புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தவறுகளைச் செய்வாயா? விரதம் ஏற்றவன் மனதார பொய் சொல்லுவானா? ஐயப்பன் நம்மைத் தண்டித்து விடுவான் என்ற பயம் இருக்காதா? எனவே, நம்பிக்கையே சுத்தம். சபரிமலை யாத்திரை மட்டுமல்ல. எந்த விதமான விரதம் ஏற்றுச் செய்வதாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கனிந்து வராத நிலையில் எந்த விரதமும் பலனளிக்காது, அதனால் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஒருவன் ஏமாற்றிக் கொள்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அடியார்
குருதேவா, பேய், பிசாசு என்பவை எல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா? இவை எல்லாம் சோம்பேறிகளின் கற்பனை என்று பலர் பதில் அளிக்கிறார்களே.
சற்குரு
பேய், பிசாசு என்பவை உண்மையே. இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஆனால், இதில் ஆயிரக் கணக்கான கற்பனைக் கதைகளும் வதந்திகளும் சேர்ந்து விடுவதால் உண்மை நிலை தெரியாமல் பலரும் குழப்பமடைந்துள்ளனர். முதலில் பேய், பிசாசு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பேய், பிசாசுகளில் ஆயிரக் கணக்கான பிரிவுகள் உண்டு. ஒரு சாதாரண ஆவி முதல் இரத்தக் காட்டேரி, சுடலைப் பேய் என பல தரப்பட்ட தீய சக்திகள் உண்டு. இவை எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. உங்களைப் பொறுத்த வரையில் பேய், பிசாசு என்பது சாதாரண மனித கண்ணுக்குத் தெரியாத ஒரு தீய சக்தி, இந்தத் தீய சக்தியிடமிருந்து உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் எப்படிக் காத்துக் கொள்வது என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் அதுவே இப்போதைக்கு உங்களுக்குப் போதுமானதாகும்.
நம் கண்ணுக்குத் தெரியாத சக்திகளை நல்லது கெட்டது என இரண்டு பிரிவாகக் கொண்டால் நல்ல சக்திகளை தேவதைகள், தெய்வங்கள் என்றும் கெட்ட சக்திகளை, தீய சக்திகளை, எதிர்மறை சக்திகளைப் பேய், பிசாசுகள் என்றும் அழைக்கிறோம். ஒரு சாதாரண மனிதனுக்கு நன்மையைச் செய்யக் கூடிய சக்திகள் ஆவி நிலையில் உள்ள, இறந்துபோன அவனுடைய பெற்றோர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் ஆவர். எப்போதாவது, எங்காவது ஒரு பேய் உங்களைத் தொந்தரவு செய்வதாகத் தோன்றினால் அல்லது தீய சக்தியால் நீங்கள் பயந்து விட்டால் உடனே இறந்து போன உங்கள் தாயை அல்லது தந்தையை அல்லது உங்கள் மேல் அதீதமான அன்பைப் பொழிந்து மறைந்து போன உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களை நினையுங்கள். இந்த நல்ல ஆவிகள் உடனே தோன்றி உங்களைத் துன்புறுத்தும் கெட்ட ஆவிகளுடன் சண்டையிட்டு, விரட்டி உங்களுக்கு நிம்மதியைத் தரும். இது உண்மையே.
முடிந்தவரை வெளியிடங்களில் தெரியாத வீடுகளில், லாட்ஜ் போன்ற விடுதிகளில் தங்குவதைத் தவிர்க்கவும். தெரிந்தவர்கள் இல்லத்தில், கோயில் வளாகங்களில் தங்குவதையே வழக்கமாகக் கொண்டிடுங்கள். இரவு பயணங்களை அறவே தவிர்த்திடவும். அவ்வாறு நீங்கள் தங்கும் இடத்தில் தீய ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தோன்றினால் மன சஞ்சலம், பதட்டம் அடையாமல் ஒரு டம்ளர் நீரை அருந்திய பின்னர் அவ்விடத்தை விட்டு உடனே வெளியேறி விடுவதே உத்தமம். நாம் மிகவும் தைரியசாலி, இந்தக் கெட்ட ஆவி எப்படிப்பட்டது, நம்மை என்ன செய்யும் என்று எந்தவித ஆராய்ச்சியிலும் இறங்க வேண்டாம்.
இத்தகைய செயல்கள் மிகவும் ஆபத்தாக முடியும். முடிந்தவரை கந்தர் சஷ்டி கவசம், திருஞானசம்பந்த நாயனார் அருளிய திருநீற்றுப் பதிகம், பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பதிகம் போன்ற கவசப் பாடல்களைப் பாடி வாருங்கள். இப்பதிகங்கள் எல்லாம் நிழல் போல் உங்களைத் தொடர்ந்து உங்களை எல்லாவிதமான ஆவித் தொந்தரவுகளிலிருந்தும் காப்பாற்றும். நெற்றியில் அணியும் விபூதி, சந்தனம், செந்துõரம், திருமண், குங்குமம், காதுகளில் அணியும் கடுக்கன், கைகளில் அணியும் காசிக் கயிறு, கங்கண், இடுப்பில் அணியும் கருப்புக் கயிறு இவையும் அற்புதமான கவசச் சக்தி சாதனங்களே.
நன்றி : www.kulaluravuthiagi.com/vina2.htm
No comments:
Post a Comment