அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். - (மத்தேயு 18:27).
.
ஒரு செல்வந்தர் ஒருவரிடம், ஒரு மனிதன் பத்து இலட்சம் ரூபாய்கள் கடன்பட்டிருந்தான். அந்த செல்வந்தர் தன் கணக்குவழக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தபோது, இந்த மனிதன் அநேக நாட்களாக தனக்கு பணத்தை திரும்ப தரவில்லை என்பது தெரிய வந்தது. உடனே அந்த மனிதனுக்கு அவர் ஆள் விட்டனுப்பி, 'என் பணத்தை கொடுத்து முடி' என்று கட்டளையிட்டார். அவனோ, 'ஐயா, என்னால் முடியவில்லை, நான் எப்படியாவது திருப்பி கொடுக்க முயற்சிக்கிறேன்' என்றான். அப்போது அந்த செலவந்தர், 'உன் மனைவி பிள்ளைகளையும், உன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்றாவது, என் கடனை அடைத்து முடி' என்றார். அப்போது அந்த மனிதன், அந்த செல்வந்தரின் காலில் விழுந்து, 'ஐயா, தயவுசெய்து கொஞ்சகாலம் பொறுத்து கொள்ளும். எப்படியாவது நான் அடைத்து விடுகிறேன். என் மனைவி பிள்ளைகளை விற்று விட்டு, நான் என்ன செய்வது ஐயா' என்று கண்ணீர் விட்டு கதறினான். அதை கேட்ட செல்வந்தர், அவன் மேல் மனதுருகி, 'சரி,போ உன்னை மன்னித்து விட்டேன்' என்று சொல்லி, அவன் அவருக்கு பட்டிருந்த பத்து இலட்ச ரூபாய் கடனையும் அவனுக்கு கொடுக்க வேண்டாம் என்று மன்னித்து விட்டார்.
.
இப்போது சந்தோஷமாய் தன் கடனெல்லாம் அடைக்கப்பட்டு விட்டதே, என மனைவி பிள்ளைகளோடு நான் சந்தோஷமாய் இருப்பேனே என்று எண்ணி கொண்டே வந்து கொண்டிருந்த அவனுக்கு எதிரே, அவனிடம் நூறு ரூபாய் கடன்பட்டிருந்த தன்னுடன் வேலை செய்யும் ஒருவன் வந்து கொண்டிருப்பதை பார்த்தான். அவனிடம், இவன் சென்று, 'நீ என்ன என் கடனை இன்னும் அடைக்காமலிருக்கிறாய், உடனே கொடுத்து முடி' என்று அவன் கழுத்தை நெரிக்க பார்த்தான். கடன் வாங்கியவனோ, 'ஐயா எப்படியாவது நான் கொடுத்து விடுகிறேன்' என்று அவன் கால்களை பற்றி கதறினான். ஆனால், இவனோ, 'உன்னை விட்டால் என் பணத்தை நீ கொடுக்கவே மாட்டாய்' என்று கூறி அவனை போலீஸில் பிடித்து கொடுத்து, 'இவன் என் பணத்தை கொடுத்து முடிக்குமட்டும், அவனை சிறையிலேயே வையுங்கள்' என்று அந்த போலீஸிடம் ஒப்படைத்தான்.
.
அதை நேரில் பார்த்த சிலர், அந்த செல்வந்தரிடம் போய், ' நீர் இந்த மனிதனுக்கு 10,000 இலட்சம் ரூபாய்களை மன்னித்தீரே, ஆனால் இவனோ போய் தனக்கு 100 ரூபாய் கொடுக்க முடியாத ஒரு மனிதனை அடிக்கவும், போலீஸில் பிடித்து கொடுக்கவும் செய்தான்' என்று கூறினர். அதை கேட்ட செல்வந்தருக்கு மிகவும் கோபம் உண்டாகி, அந்த மனிதனை பிடித்து கொண்டு வர சொல்லி, 'நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனை போலீசிடம் 'இவனை அடித்து, எனக்கு என் பணம் கிடைக்கும் வரைக்கும் இவனை சிறையில் வைத்து, எப்படியாவது பணத்தை திரும்ப பெற்று கொடுங்கள்' என்று அவர்களிடம் ஒப்படைத்தார்.
.
இந்த உவமையை தான் நாம் மத்தேயு 18ம் அதிகாரம் 23-34 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இதை படிக்கும்போதே, நமக்கு அந்த பத்து இலட்சம் கடன்பட்டிருந்த மனிதன் மேல் கோபம் வருகிறதல்லவா? நம்மில் அநேகரும் அவனை போலத்தான் இருக்கிறோம்.
.
தேவன் நம்மேல் கிருபையாய் இரங்கி, நாம் செய்த எத்தனையோ பாவங்களை, துரோகங்களை, சாபங்களை, தவறுகளை நாம் அவரை வேண்டி கொண்ட போது, மன்னித்து விட்டார். நாமும் நம் குடும்பமும் பட வேண்டிய பாடுகளிலிருந்து நம்மை விடுதலையாக்கி, தலைமுறை தலைமுறையாய் பட வேண்டிய சாபங்களிலிருந்து விடுதலையாக்கினார். நரக ஆக்கினைக்கு நம்முடைய ஆத்துமாவை தப்புவித்தார். அப்படி அவர் கிருபையாக நமக்கு மன்னித்திருக்க, அவருக்கு நன்றியாய் ஜீவிக்க வேண்டிய நாமோ, நம்முடைய குடும்பத்தில், சபைகளில், நமக்கு விரோதமாக யாராவது குற்றம் செய்து விட்டாலோ, ஒரு வார்த்தை சொல்லி விட்டாலோ போதும், அதை தாங்க முடியாதவர்களாக போய் விடுகிறோம். சிறு சிறு காரியங்களையும் நம்மால் பொறுத்து கொள்ள முடிவதில்லை. அவர்களிடம் வழக்கிட்டு, நான் யார் தெரியுமா? என்று அவர்களை விட்டு வைப்பதில்லை. தேவன் அதை பார்க்கும்போது, என்ன செய்வார்? 'நான் இவனுக்கு அல்லது இவளுக்கு எத்தனை பெரிய பாவங்களை சாபங்களை மன்னித்து விட்டேன், ஆனால் இவனோ, இந்த சிறிய குற்றத்திற்காக, தன் சகோதரன் மேல் இவ்வளவு கொடிய பகையை வெளிப்படுத்துகிறானே' என்று நம்மேல் கோபமடைவரல்லவா?
.
யூதர்களின் வழக்கத்தின்படி, அவர்கள் தங்கள் பகைவர்களை மூன்று முறை மட்டும் மன்னிப்பார்களாம். அதை அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவோடு கூட இருந்தபடியால், அவருடைய மன்னிக்கும் தன்மையை அறிந்திருந்தபடியால், இன்னும் நான்கு தடவைகளை கூட்டி, இயேசுவிடம், 'ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ' என்று கேட்டான். அப்போது, மன்னிப்பதில் வள்ளலான அவர், 'ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்' என்று சொல்லி இந்த உவமையை கூறினார்.
.
நாம் மற்றவர்களை எப்போது மன்னிப்போம்? ஒருவர் நமக்கு விரோதமாய் செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டுவிட்டு, ஊரெல்லாம் இவன் எனக்கு இப்படி செய்தான் என்று பரப்பிவிட்டு, கடைசியாக மன்னிக்கிறேன் என்று சொல்வோம். ஆனால் இயேசுகிறிஸ்து எப்போது மன்னித்தார் தெரியுமா? தம்மை சிலுவையில் வைத்து, தம் கரங்களை கால்களை ஆணிகளால் அடித்து கொண்டிருந்தபோது, அவரை சிலுவையில் வைத்து அறையும்போது, 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்று தன்னை சித்திரவதை செய்யும் அந்த நேரத்தில் தானே அவர்களை மன்னித்தாரல்லவா? அவருடைய மன்னிக்கும் மனப்பான்மை நமக்கும் வரட்டுமே!
.
அவருடைய பிள்ளைகள் என்று சொல்கிற நாமும் நமக்கு விரோதமாக துரோகம் செய்பவர்களை மன்னிப்போம். தவறு செய்பவர்களை நாமும் மன்னிப்போம். கிறிஸ்துவின் மன்னிக்கும் தன்மை இதை வாசிக்கும்போதே நமக்குள் கடந்து வரட்டும். இதை எழுதும்போதே கிறிஸ்துவின் அன்பையும் மன்னிக்கும் தன்மையையும் நினைத்து கண்ணீர் வடித்து கொண்டே எழுதுகிறேன். நாம் மன்னிக்க மன்னிக்க கர்த்தரின் ஆசீர்வாதம் நம்மேல் இறங்கி கொண்டே இருக்கும். அவருடைய குணாதிசயங்கள் நம்மை மாற்றி கொண்டே இருக்கும். கிறிஸ்துவை போல நாம் மாறும் வரைக்கும் அவர் காட்டிய வழியில் நடப்போமா? நம்முடைய பெரிய பெரிய குற்றங்களை மன்னித்த அவருக்கு முன்பாக நமக்கு விரோதமாக செய்யப்படும் சிறிய சிறிய குற்றங்கள் ஒன்றும் பெரிதானவையே அல்ல, நாமும் மன்னிப்போமா? கிறிஸ்துவின் சாயலாக மாறுவோமா?
|
No comments:
Post a Comment