photo

photo
Venkatesh.A.S

Wednesday 23 April 2014

God comes with Human appearance ! (Eeswaraha Maanushya Roope) மனித உருவில் ஈஸ்வரன் ! (ஈஸ்வரஹா மானுஷ்ய ரூபே)



வாய்ப்புகள் தவறினாலும் வாழ்க்கை தவறக்கூடாது !

முதலில் கீழே உள்ள காணொளியை காண்பதற்கு முன் அதன் கீழே உள்ள
ஒரு கதையை பார்ப்போம்.



கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட பக்திமான் ஒருவர், ஒரு சமயத்தில் ஊரெங்கும் வெள்ளம் பெருகிக்கொண்டிருக்கிற  நேரத்தில் கடவுளையே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்- தன்னை எப்படியாவது வந்து காப்பாற்றச் சொல்லி.

அப்பொழுது அவரது வீட்டு வாசலில் இரு சக்கர வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. பக்திமான் சற்று எட்டி பார்க்கவே, இரு சக்கர வண்டியில் வந்தவர் இன்னும் சில நேரம்  போனால் வெள்ளம் அதிகமாகிவிடும் அதனால் தன்னுடன் வந்து விடுமாறு அழைத்தார். ஆனால் பக்திமானோ தன்னை கடவுள் தான் நேரில் வந்து காப்பாற்றுவார் என்கிற எண்ணத்தில் வந்தவரை திருப்பி அனுப்பினார்.

சற்று நேரத்தில் வெள்ள நீர் வீட்டிற்குள் வந்து விடவே பக்திமான் முதல் மாடி சென்று அங்கேயும் கடவுளை பிராத்தனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நான்கு சக்கர வண்டி அவர் வீட்டருகில் நின்று அவரை அதில் வந்து ஏறி வெள்ளத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுமாறு  ஓட்டுனர் அழைக்கவே பக்திமான் கடவுள் மீதிருந்த நம்பிக்கையில் மீண்டும் மறுத்தார்.

மேலும் வெள்ளம் அதிகமாகி அது முதல் மாடி வரை வந்து விட பக்திமான் மொட்டை மாடிக்குச்சென்றார். அங்கும் கடவுளிடம் தன்னை எப்படியாவது வந்து காப்பாற்ற மன்றாடிக்கொண்டிருந்தார்.அப்பொழுது வானத்தில் ஹெலி காப்டர் வரும் ஓசை கேட்கவே, அதிலிருந்தவர் ஒரு ஒலிபெருக்கியில் (Speaker) ஹெலிகாப்டரிலிருந்து தொங்கும் கயிறு மூலமாக மேலேறி வந்து உயிர் பிழைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இம்முறையும் அந்த பக்திமான் வாய்ப்பைத்  தவற விட்டார்.

பின்னர் அந்த பக்திமான் வெள்ளத்தில் சிக்கி பசி தாகத்தால் உயிர் விட்டார். அப்போது அவருடைய உயிர் நியாய விசாரணைக்காக கடவுளுடைய நீதி மன்றத்திற்கு சென்றது. அங்கு அந்த பக்திமான் தான் எவ்வளவு வேண்டியும் கடவுள் தன்னைக் காப்பாற்ற வரவில்லை அதனால் தனக்கு இறப்பு ஏற்பட்டதாக மிகவும் ஆத்திரம் கலந்த வருத்தமுடன் சொன்னார்.

அப்பொழுது அங்கு மிகுந்த பிரகாசத்துடன் ஒரு ஒளி (பர ப்ரஹ்மம்) தோன்றி பக்திமானிடம் அவர் சொன்னதை நன்றாக யோசிக்குமாறு சொன்னது. அந்த பக்திமான் அந்த பிரகாசமான ஒளியையே உற்று பார்த்துக்கொண்டிருந்த போது அதில் தன்னைக் காப்பாற்ற இரு சக்கர வாகனத்தில் வந்தவர், நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர், ஹெலிகாப்டரில் வந்தவர் ஆகியோரது உருவத்தைக் கண்டார்.

அப்பொழுது தான் பக்திமானுக்கு உரைத்தது தன்னைக் காக்க மூன்று முறை இறைவன் மூன்று உருவத்தில் மூன்று வாகனத்தில் வந்ததை எண்ணினார். அது அவரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. அப்போது அவர் பரிபூரணமாக இறைவனிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார்.

-இந்த கதை ஒரு வியாபார நோக்கம் கொண்ட பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன் நான் கேட்டேன்.

இது போன்று நாம் அனுதினமும் படும் துயரத்திலிருந்து கடவுள் நம்மை விடுவிக்க மாட்டாரா என்று மிகவும் ஏங்கி கொண்டிருப்போம். ஆனால் நம்மை விடுவிக்கும் "ஆற்றல்" நமக்கு அருகிலேயே இருக்கும் ஆனால் நாம் அதை அறிந்திருக்க மாட்டோம். காரணம் நம்மை விடுவிக்கும் சக்தி "இப்படி இருக்கும், அப்படி இருக்கும்" என்று ஏதாவது கற்பனை செய்து இருப்போம்.
ஆனால் இறைவனுடைய செயலை யாரும் அறிய முடியாது.

ஆனால் இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால், இறைவன் நம்மை காப்பாற்ற வருவது ஒருபுறம் இருக்கட்டும். அறியாமையிலிருந்து நம்மை விடுவிக்கவும் சில சமயங்களில் இறைவன் ஏதாவது ரூபத்தில் நம்மிடம் வரக்கூடும்.

அது போன்ற நிகழ்வு "பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர்" வாழ்வில் நடந்ததைப் பார்ப்போம்.


இளம் சங்கரன் காவி உடையில் சிவ சிவ என்று சிவக்க ஜொலிக்க நடந்து வருகிறார்! பெனாரஸ் பட்டில் காவியும், தங்க ருத்திராட்சமும், கட் அவுட்டுகளும் அண்மையில் ஜொலித்ததே! அது போல் அல்ல! :)
சிவந்த தேகத்தில் சிவந்த காவி! தங்கத்தால் ஒளிராது ஞானத்தால் மட்டுமே ஒளிரும் தேகம்!
மெலிந்த உடல்! மெல்லிய பாதம்! படீரென குறுக்கே.....ஒரு பைராகி! so called சண்டாளன்!




சண்டாளன்! ஞானப் பெண்டாளன்!
அழுக்கு உடைகள்! கலைந்த கேசம்! கையில் கோல்! போதாக்குறைக்கு நாலு நாய்கள்!

ஏதோ காசி நகரத்து அகோரி போல-ல்ல இருக்கான்! தான் உண்ணாது, நாய்களுக்குப் பிய்த்து போட்ட படி வருகிறான்! ச்சே...என்ன இது...?
இப்படி ஒருவர், பேருந்தில், நம் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தால்? நம் மனசு முதலில் என்ன சொல்லும்?? ஆனால் ஆன்மீகம்-ன்னா மட்டும் எப்பமே வேறு கோலால் அளப்போம் அல்லவா? :)

சங்கரனும் நாம் செய்வதையே தான் செய்கிறார்! முகம் சுளிக்கிறார்! ஒதுங்கி ஓரமாக நடக்கப் பார்க்கிறார்!
ஆனால் பைராகியோ, ஒட்டினாற் போலத் தான் எதிர் திசையில் நடந்து வருகிறார்! கூடவே இந்த நாய்கள் வேறு, வீதி முழுக்க வட்டமடிப்பது போல் வருகின்றன! ஆச்சார சீலர்கள் போற்றிப் புகழும் சங்கரனுக்கோ தர்ம சங்கடம்! பிரைவேட் செக்யூரிட்டி வைத்து விரட்டும் அளவுக்கெல்லாம் அவர் படோபடானந்தா இல்லை! என்ன செய்வது?

ஆசார்யர் உம்மென்றால், உம் உம் உம் என்னும் சீடர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள் போல! "ஏய்..விலகு விலகு" என்கிறார்கள்!
ஆனால் அச்சச்சோ...பைராகி...இதோ வெகு அருகில் வந்து விட்டான்!

இவர் உடலில் வரும் விபூதி வாசனையை மிஞ்சும் அளவுக்கு, அவன் உடலில் சுடுகாட்டுச் சாம்பல் வாசனை! ஹா ஹா ஹா! ஈசன் பூசுவது என்னவோ சாம்பல் தான்! ஆனால் நாம் பூசுவோமா? இல்லை, பேசுவோம்! :)

கல்விக் கடலான சீடர்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்! சங்கரன் கை அமர்த்துகிறார்! "ஹே...கச்ச...கச்ச..." என்று வெறுப்பான குரலில், வேகமாகச் சொல்கிறார்! "ஏய்...விலகு...விலகு..."!

அதென்னமோ தெரியலை, மூத்தவராக இருந்தாலும், தன் நிலைக்கு கீழானவர்களையோ, வேலைக்காரர்களையோ, "ர்" போடாமல், "ன்/ள்" போடுகிறோம் பல பேர்!
நம் ஆதி சங்கரன், "விலகுங்கள்" என்றாவது சொல்லி இருக்கலாம்! ஆனால் "விலகு" என்று தான் அவர் வாயிலும் வந்தது!

எத்தனை ஆன்மீகம் பேசினாலும், வாசிப்பு, சு-வாசிப்பு ஆகா விட்டால் வரும் பிரச்சனை இது தான்! :)





வாயைத் திறந்தார் பைராகி! உலகத்துக்கே படியளப்பவர் எப்படி பேசத் துவங்குவார்? "அன்னம்" என்றே துவங்குகிறார்!
"அன்ன மயாத் அன்ன மயம், அதவா,
சைதன்யம் ஏவ சைதன்யாத்!"
"அன்னம் தின்கிறேன், அன்னம் தின்கிறாய்! உனக்கும் உயிர், எனக்கும் உயிர்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் நீரும் நானும் வேறு வேறா?"

சங்கரன் ஒரு கணம் திகைத்து விட்டார்! என்னாது....பார்க்கறதுக்கு இப்படி இருக்காரு! ஆனா "சைதன்யம்"-ன்னு எல்லாம் பேசறாரே!
நாம் ஒருமையில் விளித்தாலும், அவர் நம்மை, "யதி வர-முனிவரே" என்றல்லவா அழைக்கிறார்! வெட்கம் பிடுங்கித் தின்றது சங்கரனுக்கு!

"ஹே ஆதி சங்கர, எதை விலகு விலகு என்று வெறுப்பு காட்டுகிறீர்! எதை விலக்க வேணும்? என் உடம்பையா? என் ஆத்மாவையா?
எதை விலக்கினால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்? சொல்லுங்கள்! சொல்லுங்கள்!"

"ஹா...."

"மூச்சுக்கு மூச்சு, அ-த்வைதம் என்கிறீரே! அ-த்வைதம் என்றால் இரண்டு இல்லை என்பது தானே?
இப்போ மட்டும், ஆச்சார சீல ஒன்று, சண்டாளன் ஒன்று - என்று இரண்டாகி விட்டதா உங்கள் தத்துவம்? எங்கே நீர் பேசிய அ-த்வைதம்??"

அவ்ளோ தான்! இடியே இறங்கி விட்டது நம்ம சங்கரனுக்கு! இப்படியொரு எடக்கு மடக்கு கேள்வியை, இது வரை, அவர் எந்த வாத சபையிலும் கேட்டதே இல்லை!
எல்லா வாதங்களுமே தத்துவம், புஸ்தகம் என்ற அளவில் மட்டுமே பார்த்தவருக்கு, முதல் முறையாக, உண்மை உறுத்து வந்து ஊட்டுகிறது!

கையெடுத்து கும்பிடுகிறார் சங்கரன் - சண்டாளனை(ரை)!

வாயில் கிடுகிடு-வென்று, படித்த உண்மையெல்லாம், அருவியாய்க் கொட்டுகிறது! மொத்தம் ஐந்து பாடல்கள் - மனீஷா பஞ்சகம்!

அது என்ன மனீஷா? மனீஷா கொய்ராலா மேலே பாடிய பஞ்சப் பாட்டு-ன்னு நினைச்சிக்காதீக! :)
மனீஷம் = புரிதல், உணர்தல், உறுதி கொள்ளல்! மனீஷா பஞ்சகம் = உறுதிப்பாடு ஐம்பதிகம்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இப்படி ஞான யோகத்திலும், கர்ம அனுஷ்டானங்களிலும் மட்டுமே தோய்ந்திருந்த சங்கரருக்கு அன்று உலகநாதன் சுட்டிய உண்மை சுட்டது!
அ-த்வைதம் என்பது பேச்சு அளவில் நில்லாது, வாழ்வு முறை ஆகிப் போனது!
* இறை-"தத்துவம்" என்னும் தீனியில் மட்டும் திளைக்காது,
* இறை-"அன்பு" என்னும் அமுதம் கண்டு கொண்டான் சங்கரன்!

அகம் பிரம்மாஸ்மி, நேதி நேதி, தத்-த்வம்-அசி என்று பலவாறாகச் சங்கர பாஷ்யம் எழுதிய அதே சங்கரன்......
முதல் முதலாக.....பக்திப் பாடலாக....அதே காசியில்....பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் என்று ஈர மழை பொழியத் தலைப்பட்டான், இந்தச் சங்கரத் தலைவன்!







நன்றி :
https://www.youtube.com/watch?v=OAYY2lDSkfI&feature=youtube_gdata_player

http://madhavipanthal.blogspot.in/2010/04/adisankaramanishapanchakam.html




No comments:

Post a Comment